LOADING...
டி20 உலகக்கோப்பையில் ஏமாற்றம்: ஆனாலும் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
டி20 உலகக்கோப்பையில் தோற்றாலும் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

டி20 உலகக்கோப்பையில் ஏமாற்றம்: ஆனாலும் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2026
06:35 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்வியால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இருப்பினும், ஆசிய கண்டத்தின் சார்பாக 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற முதல் நான்கு அணிகளில் ஒன்றாக இந்தியா அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகி ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு

லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிப் பாதை விதிகளைப் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்கட்கிழமையன்று முறைப்படி அறிவித்துள்ளது. இதன்படி, உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறத் தவறினாலும், ஆசிய கண்டத்தை சேர்ந்த மற்ற அனைத்து நாடுகளை விடவும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்ததால், ஆசியாவிற்கு வழங்கப்பட்ட ஒரே ஒரு நேரடி ஒலிம்பிக் இடத்தை இந்தியா தட்டிச் சென்றுள்ளது.

நான்கு நாடுகள்

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள முதல் நான்கு நாடுகள்

ஐசிசி அமைப்பின் புதிய விதிகளின்படி ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய நான்கு கண்டங்களில் இருந்து உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தலா ஒரு தகுதியான அணிக்கு நேரடி ஒலிம்பிக் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஓசியானியாவில் இருந்து ஆஸ்திரேலியாவும், ஆப்பிரிக்காவில் இருந்து தென்னாப்பிரிக்காவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து அணியும், ஆசியாவில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியும் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள முதல் நான்கு மகளிர் அணிகளாகப் பெருமை பெற்றுள்ளன.

Advertisement

எஞ்சிய இடங்கள்

எஞ்சிய இரண்டு இடங்களுக்கான தகுதிச் சுற்று விதிகள்

ஐந்தாவது இடமானது போட்டியை நடத்தும் அமெரிக்காவிற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அவர்கள் 2026 டிசம்பர் மாதத்திற்குள் ஐசிசி தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் வர வேண்டும், இல்லையெனில் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் வேறு அணிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். ஆறாவது மற்றும் இறுதி இடத்தை முடிவு செய்ய 2027 ஆம் ஆண்டு 8 அணிகள் பங்கேற்கும் புதிய ஐசிசி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகள் பிரத்யேகமாக நடத்தப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

வரவேற்பு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என ஐசிசி வரவேற்பு

கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கிற்குத் திரும்புவது இந்த விளையாட்டின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய மைல்கல் என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகளில் தகுதி பெறும் ஒவ்வொரு நாடும் தங்களது 15 பேர் கொண்ட வலுவான அணியைத் தேர்வு செய்யலாம் என்றும், போட்டிகள் அனைத்தும் போமோனாவில் உள்ள அதிநவீன மைதானத்தில் தலா மூன்று அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் என்றும் ஐசிசி விளக்கமளித்துள்ளது.

Advertisement