டெஸ்ட் கிரிக்கெட்டில் 100வது போட்டி; இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் மோதலில் புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் பெற்ற அபார வெற்றியுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியை இந்திய கிரிக்கெட் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இதையடுத்து ஜூலை 20 ஆம் தேதி இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையேயான 100 வது டெஸ்ட் போட்டியாகும்.
1948 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு வந்து முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதில் இருந்து, 75 ஆண்டுகளுக்குப் பிறகு, 100வது போட்டி எனும் மைல்கல்லை எட்ட உள்ளது.
தற்போது இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து (131) மற்றும் ஆஸ்திரேலியா (107) ஆகிய இரு அணிகள் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன.
ind vs wi test head to head record
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளி விபரம்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் வேஸ்ட் இண்டீஸ் அணி 30 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.
தற்போதைய தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதோடு சேர்த்து இந்திய அணி இதுவரை 23 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 46 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
தற்போதைய தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில், இந்தியா 100% வெற்றியைக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அதே போட்டி, விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டியாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.