LOADING...
உலக சாதனையைத் தகர்த்த இந்தியா! அமெரிக்காவுக்கு எதிரான த்ரில் வெற்றியால் உருவான மெகா ரெக்கார்ட்! கேப்டன் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம்
டி20 உலகக்கோப்பை 2026இல் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சாதனை

உலக சாதனையைத் தகர்த்த இந்தியா! அமெரிக்காவுக்கு எதிரான த்ரில் வெற்றியால் உருவான மெகா ரெக்கார்ட்! கேப்டன் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 08, 2026
07:27 am

செய்தி முன்னோட்டம்

மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி தனது சாம்பியன் பட்டத்தைத் தற்காக்கும் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக மந்தமாக இருந்த வான்கடே ஆடுகளத்தில், ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணியை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது அபார ஆட்டத்தால் மீட்டெடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் எந்த ஒரு அணியும் செய்யாத மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவின் அதிரடி கேப்டன் இன்னிங்ஸ்

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அமெரிக்கப் பந்துவீச்சாளர்கள் கடும் அதிர்ச்சி அளித்தனர். 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார். வெறும் 49 பந்துகளில் 84* ரன்கள் குவித்த சூர்யகுமார், கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் உயர முக்கியக் காரணமாக இருந்தார். 15 ஓவர்கள் முடிவில் 94/6 என இருந்த இந்தியா, சூர்யகுமாரின் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 21 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலம் இந்தியா 161/9 என்ற சவாலான இலக்கை எட்டியது.

ஆதிக்கம்

பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்

162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அமெரிக்க அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறியது. காய்ச்சல் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடாத நிலையிலும், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி அமெரிக்காவை 132 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். வான்கடே மைதானத்தில் டி20 போட்டிகளில் பாதுகாக்கப்பட்ட மிகக்குறைந்த ஸ்கோர் (161) இதுவாகும். இதற்கு முன்னதாக 2023 இல் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 162 ரன்களைப் பாதுகாத்ததே சாதனையாக இருந்தது.

Advertisement

சாதனை

இந்தியாவின் புதிய உலக சாதனை

இந்தப் வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2024 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, தற்போது 2026 உலகக்கோப்பையின் முதல் போட்டியிலும் வென்று ஒன்பதாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 8 தொடர் வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தன. தற்போது அந்தச் சாதனையை இந்தியா முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Advertisement

விராட் கோலி

விராட் கோலியின் சாதனை முறியடிப்பு

சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்ததோடு, போட்டியின் ஆட்ட ஆயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 17வது ஆட்ட நாயகன் பட்டத்தை வென்று, அதிக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் 15 விருதுகளை வென்றிருந்த விராட் கோலின் சாதனையை முறியடித்தார். இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Advertisement