இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : பேட்டிங் சொதப்பலால் படுதோல்வி அடைந்தது இந்தியா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜாஜ் பூங்காவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வியைத் தழுவியது. முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஒன் டவுனாக களமிறங்கிய திலக் வர்மா சொற்ப ரன்களில் அவுட்டானாலும், சாய் சுதர்சன் (62) மற்றும் கேஎல் ராகுல் (56) ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அணியை மீட்டனர். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால், 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டோனி டி ஸோர்ஸி சதம்
212 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டோனி டி ஸோர்ஸி (119 நாட் அவுட் ) மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் (52) அபாரமாக விளையாடினர். இதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் அவுட்டானாலும், டோனி டி ஸோர்ஸி கடைசி வரை அவுட்டாகாமல் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினார். ரஸ்ஸி வான் டெர் டுசென் ஒருபுறம் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானாலும், தென்னாப்பிரிக்கா 42.3 ஓவர்களில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. மூன்றாவது போட்டி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.