இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் முதல் ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த திலக் வர்மாவும் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, மூன்றாவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் மற்றும் கேஎல் ராகுல் கூட்டணி அமைத்தனர்.
211 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் (62) மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் (56) ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அணியை மீட்டனர். தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் சாய் சுதர்சன், முன்னதாக முதல் ஒருநாள் போட்டியிலும் அரைசதம் அடித்த நிலையில், தற்போது இரண்டாவது போட்டியிலும் அரைசதம் அடித்தார். இதற்கிடையே இந்த இரு வீரர்களும் அவுட்டான நிலையில், அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற, இந்தியா 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணியில் சிறப்பாக பந்துவீசிய நண்ட்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும், பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.