இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : செஞ்சூரியனில் இரு அணிகளின் செயல்திறன்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 மற்றும் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எஞ்சியுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. முன்னதாக, டி20 தொடரில் 1-1 என சமன் செய்த இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா ஒருநாள் தொடரை கைப்பற்றியது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கு முக்கிய பங்களித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானந்த்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளின் புள்ளிவிபரம்
சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 28 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 22 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. மற்ற 3 போட்டிகள் டிராவில் முடிந்தன. மறுபுறம், இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, இந்த மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா சராசரியாக 315 ரன்கள் எடுத்துள்ளது. அதேசமயம், இந்தியாவின் சராசரி ஸ்கோர் 259 ரன்கள் ஆகும். 2020இல் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 621 ரன்கள் குவித்ததே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.