டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் ஒப்புகொண்டது
செய்தி முன்னோட்டம்
2026 டி20 உலக கோப்பை தொடரில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு செல்ல மறுத்த வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்த போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவை அந்நாட்டு அரசு அதிரடியாக திரும்ப பெற்றுள்ளது. லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி பிரதிநிதிகள் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற நீண்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த 'யூ-டர்ன்' எடுக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விளக்கம்
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வங்கதேசம், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைக் காக்கவும் பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய திருப்பமாக, இந்தியாவுக்கு செல்ல மறுத்த வங்கதேச அணியின் மீது எந்தவித நிதி அல்லது நிர்வாக ரீதியான அபராதமும் விதிக்கப்போவதில்லை என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும், 2028 முதல் 2031-க்குள் ஒரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பு வங்கதேசத்திற்கு வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது கொழும்பில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் வீரர்கள், பாகிஸ்தானின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.