இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் உள்ள எம் சின்னச்சாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற உள்ளது. முன்னதாக, இதற்கு முன்னர் நடந்த நான்கு போட்டிகளில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மேலும், கடைசியாக ராய்ப்பூரில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இதனால் ஐந்தாவது போட்டியின் வெற்றி தோல்வி தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்காது. இதற்கிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான அணியை கட்டமைக்க புதிய வீரர்களை முயற்சிக்க இரு அணிகளும் இந்த தொடரை பயன்படுத்தி வருகின்றன.
போட்டிக்கு மழையால் ஆபத்து வருமா?
பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும் போட்டி முழுவதும் 100 சதவீதம் மேக மூட்டம் இருக்கும் என வானிலை அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விளையாட்டின் பிற்பகுதியில் பனி பெரும் பங்கை வகிக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. மைதானத்தை பொறுத்தவரை பொதுவாக பேட்டர்களுக்கு மிகவும் சாதகமானதாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் சில வாய்ப்புகளை பெற்றாலும், 180 ரன்களுக்கு கீழே முதல் இன்னிங்சில் எடுத்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.