இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : கவுகாத்தி மைதானம் இந்தியாவுக்கு சாதகமா பாதகமா?
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முந்தைய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் 200க்கும் அதிகமான ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த இந்தியா, இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மூன்றாவது போட்டி நடைபெறும் பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் டி20 கிரிக்கெட் செயல்திறன் குறித்து இதில் பார்க்கலாம்.
கவுகாத்தியில் இந்திய அணியின் செயல்திறன்
இந்திய அணி 2017 முதல் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மொத்தம் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய முதல் டி20 2017இல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்தது. அதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அடுத்து 2020இல் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 2022இல், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 237 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 47 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை போராடினாலும் 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்தியா வெற்றி பெற்றது.