டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா
புதன்கிழமை (செப்டம்பர் 20) லண்டனில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) நடத்திய டிராவில் டேவிஸ் கோப்பை 2024 உலக குரூப் 1 பிளே-ஆஃப் சுற்று போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. மேலும் போட்டியை நடத்தும் நாடாக, பாகிஸ்தான் மைதானம் மற்றும் போட்டியை நடத்தும் தேதியை முடிவு செய்யும். முன்னதாக, இந்தியா 2019இல் பாகிஸ்தானை எதிர்கொண்டபோது, பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்திய அணியின் வற்புறுத்தலால் பாகிஸ்தானுக்கு பதிலாக கஜகஸ்தானில் போட்டி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் தனது முன்னணி வீரர்களை தவிர்த்துவிட்டு புதுமுக வீரர்களை விளையாட வைத்தது குறிப்பிடத்தக்கது.
2024 டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
2019இல் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்ட நிலையில், இந்த முறை பாகிஸ்தானில் போட்டி நடக்கும் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என நம்புவதாக அந்நாட்டின் மூத்த வீரர் அகில் கான் தெரிவித்துள்ளார். டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் சென்றால் போட்டியை புல்தரையில் நடத்துவோம் என பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் சலீம் சைபுல்லா கான் தெரிவித்துள்ளார். சைபுல்லா கான் மேலும், "இந்தியா பாகிஸ்தானுக்கு வர வேண்டும். இந்தியர்கள் வந்தால், நாங்கள் நல்ல அண்டை நாடுகள் என்ற நல்ல செய்தியை அது அனுப்பும்." என்று கூறினார். இதற்கிடையே டேவிஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அனைத்திலும் வெற்றி பெற்று முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.