
மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி
செய்தி முன்னோட்டம்
வெள்ளியன்று (அக்டோபர் 13) நடைபெற்ற மெர்டேகா கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்றது.
மினி ஆசிய கோப்பை என அழைக்கப்படும் இந்த போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
வழக்கமாக பத்து அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்த ஆண்டு நான்கு அணிகள் மட்டுமே பங்குபெறும் போட்டியாக மாற்றப்பட்டது.
இதன்படி, இந்தியா, மலேசியா, தஜிகிஸ்தான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் பாலஸ்தீனம் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது.
இதையடுத்து அரையிறுதியில் பாலஸ்தீனத்தை எதிர்கொள்ளவிருந்த தஜிகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம், மற்றொரு அரையிறுதிப்போட்டியில் மலேசியாவை இந்தியா எதிர்கொண்டது.
Malaysia beats India in Merdeka Cup 2023 Semi Final
தோல்வியுடன் வெளியேறியது இந்தியா
2001ஆம் ஆண்டுக்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணி இதில் பங்கேற்ற நிலையில், மலேசியாவின் தாக்குதல் ஆட்டத்தை எதிர்கொள்ள திணறியது.
போட்டியின் ஏழாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து மலேசியா முன்னிலை பெற்ற நிலையில், அடுத்தடுத்து மேலும் இரண்டு கோல் அடித்து முதல் பாதி முடிவில் 3-1 என முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாம் பாதியில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தாலும், மலேசியாவும் மற்றொரு கோல் அடிக்க, கடைசியில் இந்தியா 2-4 என தோல்வியைத் தழுவியது.
அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மலேசியா, தஜிகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய கால்பந்து அணியைப் பொறுத்தவரை குவைத்தில் அடுத்து நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்கிறது.