சீனாவிற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் விவகாரத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் இந்தியா
2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரானது சீனாவின் ஹாங்சௌ மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்குபெறுவதற்காக இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில், அருணாச்சல பிரதேசத்திலிருந்து பங்குபெறவிருந்த மூன்ரு வீரர்களின் பயணத்திறகு மட்டும் சீனா தடங்கல் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறது இந்தியா. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதியை இந்தியாவின் ஒரு பகுதியாக இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்காமல், சீனாவின் ஒரு பகுதி எனக் கூறி கடந்த மாதம் புதிய சீன வரைபடத்தை வெளியிட்டது சீனா. எனவே, அந்த மாநிலத்திலிருந்து பங்குபெறவிருந்த வீரர்களுக்கு முறையான விசா வழங்காமல், ஸ்டேபிள் செய்யப்பட்ட விசாக்களை வழங்கியது அந்நாடு.
சீனாவிற்கு பயணம் செய்வதில் தடங்கல்:
வுஷூ விளையாட்டிற்கு அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த யூமன் வாங்ஸூ, ஒனிலா டெகா மற்றும் மெபுங் லம்கு ஆகிய மூன்று பேருடன் மொத்தம் 13 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தேவையான முக்கியமான ஆவணங்களை சீனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்திலிருந்து, மேற்கூறிய மூன்று வீரர்களால் மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. மற்ற 10 வீரர்களின் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு எந்த வித தடங்களும் இல்லாத நிலையில், குறிப்பிட்ட இந்த மூன்று வீரர்களின் ஆவணங்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியாததற்கு சீனாவே காரணம் எனக் குற்றம் சுமத்தியிருக்கிறது இந்தியா. இந்தக் காரணத்தால் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மேற்கூறிய மூன்று வீரர்களாலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ஜூலையிலும் பிரச்சினை செய்த சீனா:
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சீனாவில் நடைபெறும் போட்டிகளுக்கான பயணத்தின் போது பாதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் சீனாவின் செங்குடுவில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு மேற்கூறிய வீரர்களுக்கு ஸ்டேபிள் செய்யப்பட்ட விசாக்களையே அளித்திருந்தது சீனா. எனவே, அப்போதும் இந்த வீரர்களால் அந்த விளையாட்டுத் தொடரில் பங்குபெற முடியவில்லை. அருணாச்சல பிரதேசம் இந்தியாவிற்கு உட்பட்ட பகுதி என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் குறிக்கவே, அந்தப் பகுதியிலிருந்து சீனாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு ஸ்டேபிள் செய்யப்பட்ட விசாக்களை அளித்து வருகிறது அந்நாடு.
சீன பயணத்தை ரத்து செய்த விளையாட்டுத்துறை அமைச்சர்:
சீனாவின் இந்த நடவடிக்கைகளால், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரை முன்னிட்டு சீனாவிற்கு தான் மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்து செய்திருக்கிறார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர். மேலும், இந்த விவகாரம் குறித்து புதுடெல்லியிலும், பீஜிங்கிலும் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், அரிந்தம் பாச்சி. ஆனால், என்ன விதமான எதிர்ப்பு மற்றும் எந்த விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் LAC (Line of Actual Control) பகுதியில் பிரச்சினை நிலவி வரும் நிலையில், இந்த விளையாட்டு வீரர்கள் தொடர்பான பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் எக்ஸ் பதிவு:
I strongly condemn this act by China to deny visas to our Wushu Athletes from Arunachal Pradesh who were to participate in the 19th Asian Games in Hangzhou. This violates both the spirit of Sports & also the Rules governing the conduct of Asian Games, which explicitly prohibits...— Kiren Rijiju (@KirenRijiju) September 22, 2023