சுனில் சேத்ரியின் அபார கோலால் இந்திய கால்பந்து அணி வெற்றி
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த 2023 இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பையில் வனுவாட்டுக்கு எதிராக 81வது நிமிடத்தில் கோல் அடித்து, இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். வனுவாட்டுக்கு எதிராக இந்தியாவின் சேத்ரி, நந்தகுமார் சேகர் மற்றும் மகேஷ் நௌரெம் ஆகிய மூவரும் ஆரம்பம் முதல் கோல் அடிக்க முயற்சி செய்தாலும், எதிரணி டிஃபண்டர்கள் அபாரமாக செயல்பட்டு அதை தடுத்தனர். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் முடிந்த நிலையில், இரண்டாவது பாதியில் இந்தியாவின் சுனில் சேத்ரி அபாரமாக செயல்பட்டு ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சர்வதேச கால்பந்தில் ஐந்தாவது இடத்தில் சுனில் சேத்ரி
சுனில் சேத்ரி கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய கால்பந்தின் முகமாக திகழ்வதோடு, இந்தியாவுக்காக எண்ணற்ற மேட்ச் வின்னிங் கோல்களை அடித்துள்ளார். வனுவாடு அணிக்கு எதிராக அவர் அடித்த கோல் சர்வதேச போட்டியில் 86வது கோலாகும். இதன் மூலம் ஆடவர் கால்பந்தில் ஐந்தாவது அதிக கோல் அடித்தவராக உள்ளார். தற்போதைய நிலையில் அவரை விட கிறிஸ்டியானோ ரொனால்டோ (122), அலி டேய் (109), லியோனல் மெஸ்ஸி (102), மொக்தர் தஹாரி (89) ஆகியோர் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். இதற்கிடையே, சர்வதேச போட்டிகளில் சுனில் சேத்ரியை தவிர வேறு எந்தவொரு இந்திய வீரரும் 50 கோல்களை கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.