INDvsSA ஒருநாள் தொடர்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் விலகினால் இந்தியாவை வழிநடத்தப் போவது யார்?
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஷுப்மன் கில் மற்றும் ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் காயத்தால் விலகினால், இந்திய அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வி தேர்வுக்குழுவினரிடையே எழுந்துள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நவம்பர் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஷுப்மன் கில் விலகினால் வேறு ஒருவர் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உருவாகும்.
வாய்ப்புகள்
கேப்டன் வாய்ப்புகள்
ரோஹித் ஷர்மா அல்லது விராட் கோலியிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், தேர்வுக்குழுவுக்கு மாற்றுத் தேர்வுகள் குறைவாகவே உள்ளன. இந்தச் சூழ்நிலையில், அணியில் உள்ள மூத்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டுமே கேப்டன்சி அனுபவம் கொண்டவராக இருக்கிறார். அவர் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி, அவற்றில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அவர் கடைசி முறையாக 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் கேப்டனாகச் செயல்பட்டார். மற்றொரு தேர்வாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்காத இவர், அணிக்குத் திரும்பினால் கேப்டனாகச் செயல்பட வாய்ப்புள்ளது. அவர் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்ததில்லை என்றாலும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார்.