LOADING...
6 சிக்ஸர் முதல் கோலி காட்டிய விஸ்வரூபம் வரை! டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய ரசிகர்களின் ஃபேவரைட் மேட்ச்கள் எவை?
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் டாப் 5 மறக்க முடியாத போட்டிகள்

6 சிக்ஸர் முதல் கோலி காட்டிய விஸ்வரூபம் வரை! டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய ரசிகர்களின் ஃபேவரைட் மேட்ச்கள் எவை?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 06, 2026
01:01 pm

செய்தி முன்னோட்டம்

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி பல சிலிர்ப்பூட்டும் வெற்றிகளைக் கண்டுள்ளது. 2007 இல் ஒரு இளம் அணியாகக் களமிறங்கி கோப்பையை வென்றது முதல், 2024 இல் ரோஹித் ஷர்மா தலைமையில் சாம்பியன் ஆனது வரை பல ஆட்டங்கள் நம் நினைவில் என்றும் நீங்காதவை. அவற்றில் மிக முக்கியமான சில போட்டிகளை இங்கே காண்போம்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்கின் 6 சிக்ஸர்கள் (2007, எதிர் - இங்கிலாந்து)

ஸ்டூவர்ட் பிராட் வீசிய அந்த 19 வது ஓவரை யாராலும் மறக்க முடியாது. ஆண்ட்ரூ பிளிண்டாஃப் செய்த சீண்டலுக்குப் பதிலடியாக, யுவராஜ் சிங் ஆக்ரோஷமாக விளையாடி 6 பந்துகளில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். வெறும் 12 பந்துகளில் அவர் அடித்த அரைசதம் இன்றும் உலக சாதனையாக உள்ளது. இந்தப் போட்டிதான் டி20 கிரிக்கெட் மீதான மோகத்தை இந்தியர்களிடம் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான பவுல்-அவுட் (2007)

இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான முதல் டி20 உலகக்கோப்பை மோதல் 'டை' (Tie) ஆனது. வெற்றியாளரைத் தீர்மானிக்க 'பவுல்-அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. எம்எஸ் தோனியின் அறிவுரைப்படி சேவாக், ஹர்பஜன் மற்றும் உத்தப்பா ஆகியோர் ஸ்டம்புகளைச் சரியாகத் தாக்கினர். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று முறையும் இலக்கைத் தவறவிட்டனர். 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற அந்தத் தருணம் ஒரு கால்பந்து போட்டியைப் பார்ப்பது போன்ற த்ரில்லைத் தந்தது.

Advertisement

விராட் கோலி

விராட் கோலியின் மெல்போர்ன் காவியம் (2022, எதிர் - பாகிஸ்தான்)

160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் விராட் கோலி காட்டிய விஸ்வரூபம் ஆட்டத்தையே மாற்றியது. குறிப்பாக ஹாரிஸ் ரவுஃப் வீசிய 19 வது ஓவரில் அவர் அடித்த அந்த 'ஸ்ட்ரெய்ட் சிக்ஸர்' கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஷாட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடைசி பந்தில் அஸ்வின் ரன் எடுக்க, மெல்போர்ன் மைதானமே அதிர்ந்த அந்த வெற்றி கோலியின் வாழ்நாள் சிறந்த ஆட்டமாகும்.

Advertisement

வங்கதேசம்

வங்கதேசத்திற்கு எதிரான 1 ரன் வெற்றி (2016)

பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி 3 பந்துகளில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா வீசிய அந்த ஓவரில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழ, கடைசி பந்தில் தோனி மின்னல் வேகத்தில் ஓடி வந்து ரன் அவுட் செய்தார். ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற அந்த வெற்றி, எம்எஸ் தோனியின் சமயோசித புத்திக்கு ஒரு சான்றாகும்.

ரோஹித் ஷர்மா

2024 இறுதிப் போட்டி: ரோஹித் ஷர்மாவின் சாம்பியன் கனவு

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் சாம்பியன் ஆன தருணம் இது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சு இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. சூர்யகுமார் யாதவ் எல்லையில் பிடித்த அந்த மிரட்டலான கேட்ச் மற்றும் ரோஹித் ஷர்மாவின் ஆனந்தக் கண்ணீர் இந்திய கிரிக்கெட்டின் புதிய சகாப்தத்தின் அடையாளமாகும்.

Advertisement