யு19 ஆசிய கோப்பையில் 211 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
முகமது அமானின் நாட் அவுட் சதம் மூலம் திங்களன்று (டிசம்பர் 2) நடைபெற்ற யு19 ஆசிய கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. முகமது அமான் 118 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தார். கார்த்திகேயா 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மத்ரே 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் விளாசினார்.
128 ரன்கள் எடுத்த ஜப்பான்
340 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ஜப்பான் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. முன்னதாக, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய கெல்லி, அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசியதன் மூலம், 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த பிறகு, இந்தியா மீண்டும் குரூப் ஏ பிரிவில் வெற்றியைப் பெற்றது. புதன் கிழமை நடைபெறும் இறுதிக் குழு ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொள்கிறது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் டிசம்பர் 6ஆம் தேதி நடக்கும் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.