3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது 20-ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. கடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி, இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. பிரன்டன் கிங்கும், கைல் மேயர்சும், WIஅணிக்கு பலமான தொடக்கத்தை தந்த நிலையில், இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தனர். மேயர்ஸ் 25 ரன்னிலும், அடுத்துவந்த, ஜான்சன் சார்லஸ், 12 ரன்னிலும் வெளியேறினர். சென்ற போட்டியில் அபாரமாக விளையாண்டு, ரன்மழை பொழிந்த நிகோலஸ் பூரன், இம்முறை 20 ரன்களே பெற்று ஆட்டம் இழந்தார். அவர் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சால், ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
சாதனை புரிந்தார் குல்தீப் யாதவ்
20-ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பவெல் 40 ரன்னுடனும், ஷெப்பர்டு 2 ரன்னுடனும், ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 3 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல், முகேஷ்குமார் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலம் சர்வதேச 20-ஓவர் கிரிக்கெட்டில், அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைத்தார் குல்தீப். அணியின் வெற்றியை நிர்ணயம் செய்ய, சூர்யகுமார் யாதவ், பவுண்டரி, சிக்சருடன் ரன்வேட்டையை தொடங்கினார். இந்திய அணி, 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.