டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஒரு ஆண்டில் 100 சிக்சர்கள் அடித்து இந்தியா சாதனை
செய்தி முன்னோட்டம்
பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணி வரலாறு படைத்தது.
கிரிக்பஸ் அறிக்கையின் படி, ஒரு காலண்டர் ஆண்டில் 100 டெஸ்ட் சிக்ஸர்களை அடித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவின் 2வது இன்னிங்ஸின் போது இந்த மைல்கல் சாதனை எட்டப்பட்டது. 2024இல் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வந்துள்ள நிலையில், இது அவர்களின் பேட்டிங் திறமைக்கு மற்றொரு சான்றாகும்.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து 89 சிக்சர்கள் அடித்ததே சாதனையையே இருந்த நிலையில், அதை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், 2021இல் இந்தியா 87 சிக்ஸர்களை அடித்து அப்போது சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்ட் போட்டி மூன்றாம் நாள் முடிவில் கள நிலவரம்
போட்டியின் முதல் நாள் மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
எனினும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் 46 ரன்களுக்கு சுருண்டது.
தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி மூன்றாவது நாளில் 402 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா பொறுப்புடன் ஆடி வரும் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 52 ரன்களிலும் விராட் கோலி 70 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், சர்ஃபராஸ் கான் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார்.