டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு; 200வது போட்டியில் விளையாடும் இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) பங்கேற்கிறது. இது சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், இந்தியா பங்குபெறும் 200வது போட்டியாகும். 2006 டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. 2007இல் அறிமுக டி20 உலகக்கோப்பையில் இந்தியா பங்கேற்பதற்கு முன்னர் விளையாடிய ஒரே டி20 போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், எம்எஸ் தோனி தலைமையில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை வெற்றி 2008இல் ஐபிஎல் தொடங்க காரணமாக அமைந்தது.
டி20 வரலாற்றில் இந்தியாவின் முக்கிய புள்ளிவிபரங்கள்
டிசம்பர் 1, 2006 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடிய இந்தியா, ஜூன் 27, 2018 அன்று அயர்லாந்திற்கு எதிராக இந்தியா தனது 100வது டி20 போட்டியில் விளையாடியது. ஆகஸ்ட் 3, 2023 அன்று டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்திய அணி தனது 200வது போட்டியில் விளையாட உள்ளது. சுவாரஸ்யமாக, இந்தியா தனது முதல் 100 டி20 போட்டிகளில் விளையாட 4,226 நாட்கள் (2006 முதல் 2018 வரை) எடுத்தது. ஆனால் அடுத்த 100 போட்டிகளில் விளையாட 1,863 நாட்கள் (2018-2023) மட்டுமே ஆனது. உலக அளவில் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய அணியாக, 223 போட்டிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.