INDvsWI முதல் டி20: இந்தியா அதிர்ச்சித் தோல்வி; காரணத்தை விளக்கிய ஹர்திக் பாண்டியா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) இந்திய கிரிக்கெட் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டார். போட்டிக்கு பின்னர் பேசிய ஹர்திக் பாண்டியா, இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது மற்றும் நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைக்காமல் போனது தான் தோல்விக்கு காரணம் என ஒப்புக்கொண்டார். ஒரு இளம் அணியாக சில தவறுகளை செய்தாலும், ஆட்டம் முழுவதும் சிறப்பாகவே செயல்பட்டோம் என்றும், அடுத்த 4 ஆட்டங்களில் இன்னும் நல்ல செயல்திறனை வெளிப்படுத்துவோம் என்றும் ஹர்திக் பாண்டியா கூறினார்.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஹைலைட்ஸ்
போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ப்ரண்டன் கிங் 28 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில், நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பவல் முறையே 41 மற்றும் 48 ரன்கள் எடுத்து, 20 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோரை 149 ரன்களாக உயர்த்தினர். இந்திய அணி எளிதான இலக்குடன் களமிறங்கினாலும், தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் மற்றும் ஷுப்மன் கில் சொற்ப ரன்களில் வெளியேறினர். மிடில் ஆர்டர் பேட்டர்கள் நிதானமாக ரன் குவித்தாலும், சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், கடைசில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.