IND vs BAN : இந்தியாவுக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்
கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களை இந்திய வீரர்கள் எளிதாக சரித்தனர். அதே நேரம் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்களை எடுத்தார். மேலும் தவ்ஹித் ஹ்ரிதோய் 54 ரன்களை எடுத்தார். இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுத்த நிலையில், நாசம் அகமது 44 ரன்களும், மஹிதி ஹாசன் 29 ரன்களும் எடுத்தனர்.
ஷர்துல் தாக்கூர் அபார பந்துவீச்சு
ஒட்டுமொத்தமாக வங்கதேச கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பிரஷித் கிருஷ்ணா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் மற்றும் 2,500 ரன்கள் எடுத்த கபில்தேவின் சாதனையை சமன் செய்தார். இதற்கிடையே, இந்த போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அறிமுகப்போட்டியில் விளையாடும் திலக் வர்மா 4 ஓவர்கள் பந்துவீசிய நிலையில், ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.