INDvsBAN 2வது டெஸ்ட்: 1964க்கு பிறகு முதல் முறை; கான்பூர் டெஸ்டில் சுவாரஸ்ய சம்பவம்
இந்தியா vs வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்க உள்ளது. மழை காரணமாக போட்டி ஒருமணி நேரம் தாமதமாக தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். உள்நாட்டு டெஸ்ட் தொடர்களைப் பொறுத்தவரை இந்திய அணி டாஸ் வென்று 9 ஆண்டுகளில் முதல் முறையாக பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. கடைசியாக விராட் கோலி தலைமையில் 2015இல் பெங்களூரில் நடந்த போட்டியில் மட்டுமே இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கான்பூர் மைதானத்தில் இரண்டாவது முறை
குறிப்பிடத்தக்க வகையில், கான்பூர் மைதானத்தில் இதுவரையிலான 24 போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச முடிவு செய்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 1964இல் நடந்த போட்டியில் மட்டுமே டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஜடேஜா, அஸ்வின், ஆகாஷ் தீப், பும்ரா, சிராஜ். வங்கதேசம்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது.