Page Loader
INDvsBAN முதல் டெஸ்ட்: 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி

INDvsBAN முதல் டெஸ்ட்: 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2024
12:03 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 376 ரன்கள் எடுத்தது. இதில் சிறப்பாக விளையாடி ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்தார். மேலும், ரவீந்திர ஜடேஜா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தனர். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி

அஸ்வின் அபார பந்துவீச்சு

227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி, ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்டின் சதங்கள் மூலம் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 515 ரன்கள் எனும் இமாலய இலக்குடன் கடைசி இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்மல் ஹுசைன் சாண்டோ பொறுப்புடன் விளையாடினாலும், எதிர்முனையில் விளையாடிய வீரர்கள் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்களுடன் களத்தில் இருந்த வங்கதேசம், நான்காவது நாள் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியது. இதன் மூலம் இறுதியில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.