சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை கடந்த ஏழாவது இந்தியர் : ரோஹித் சர்மா சாதனை
ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த ஏழாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் 35 ரன்கள் எடுத்து அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் ரோஹித் தற்போது 438 சர்வதேச போட்டிகளில் 42.85 சராசரியில் 17,014 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியர்களில் சச்சின் டெண்டுல்கர் (34,357), விராட் கோலி (25,047), ராகுல் டிராவிட் (24,208), சவுரவ் கங்குலி (18,575), எம்எஸ் தோனி (17,266), வீரேந்திர சேவாக் (17,253) ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித்தை விட முன்னணியில் உள்ளனர். மேலும் உலகளவில் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை கடந்த 28வது வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் புள்ளி விபரங்கள்
ரோஹித் 49 டெஸ்டில் 45.66 என்ற சராசரியில் 3,379 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 9 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்கும். ரோஹித் 241 ஒருநாள் போட்டிகளில் 48.91 சராசரியுடன் 9,782 ரன்களை வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களுடன் கோலி (46) மற்றும் டெண்டுல்கருக்கு (49) அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளார். வேறு எந்த பேட்டரும் ஒருநாள் போட்டிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இரட்டை சதம் அடித்ததில்லை. 148 போட்டிகளில் 31.32 சராசரியுடன் 3,853 ரன்களைக் குவித்துள்ள ரோஹித், டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் ஆவார். இதில் 4 சதங்கள் அடித்துள்ளார்.