இந்தியாவில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13வது இந்திய வீரர் : விராட் கோலி சாதனை
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டியில் கோலி களம் இறங்கியதும், இந்தியாவில் 50வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் தற்போது இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் 3வது வீரரானார். இந்திய அணிக்கான தற்போது விளையாடிக் கொண்டு இருப்பவர்களில் கோலியைத் தவிர்த்து சேதேஷ்வர் புஜாரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மட்டுமே சொந்த மண்ணில் 50 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் ஆவார். இந்தூரில் நடந்த முந்தைய போட்டியில் புஜாரா தனது 50வது டெஸ்டில் களமிறங்கினார். அஸ்வின் அகமதாபாத்தில் தனது 55வது டெஸ்டில் விளையாடினார்.
இந்திய மண்ணில் 50க்கும் மேல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களின் முழு பட்டியல்
இந்தியாவில் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடியவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 94 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் 70 போட்டிகளுடன் இரண்டாம் இடத்திலும், கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் 65 போட்டிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் முறையே அனில் கும்ப்ளே 63 போட்டிகளுடனும், விவிஎஸ் லக்ஷ்மண் 57 போட்டிகளுடனும், ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் 55 போட்டிகளுடனும், திலீப் வெங்க்சர்க்கார் 54 போட்டிகளுடனும் உள்ளனர். மேலும், சேவாக் 52 போட்டிகளிலும், புஜாரா 51 போட்டிகளிலும், கங்குலி மற்றும் கோலி 50 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.