INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெறவுள்ளது. தொடர் தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த மைதானத்தில் இந்தியா 2019 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியா மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1987 இல் சேப்பாக்கத்தில் முதல்முறையாக ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதின. ஜியோஃப் மார்ஷின் அபார சதத்தால் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு, ஆஸ்திரேலியா 2017 இல் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. விராட் கோலி இந்த மைதானத்தில் ஏழு முறை விளையாடி 40.42 சராசரியில் 283 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார். மூன்று ஒருநாள் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலர்களில் இந்திய அணியின் அஜித் அகர்கர் முன்னணியில் உள்ளார். தற்போதைய வீரர்களில், புவனேஷ்வர் குமார் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.