ஜோதிடரிடம் ஆலோசித்து இந்திய கால்பந்து அணிக்கு வீரர்களை தேர்வு செய்த தலைமை பயிற்சியாளர்
இந்தியாவின் தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், டெல்லியைச் சேர்ந்த ஜோதிடரான பூபேஷ் ஷர்மாவிடம் வீரர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 9, 2022 அன்று, இந்தியா ஒரு முக்கியமான ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானுடன் கொல்கத்தாவில் விளையாடுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், ஒவ்வொரு வீரருக்கும் ஜோதிட நேரத்தை கணித்துக் கூறும்படி இகோர் ஸ்டிமாக் கேட்டுள்ளார். அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மூத்த அதிகாரி ஒருவரால் இந்தியப் பயிற்சியாளருக்கு அந்த ஜோதிடர் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் முழுவதையும் அம்பலப்படுத்தியுள்ளது.
ஜோதிடரின் அறிவுரையை முழுமையாக பின்பற்றாத இகோர் ஸ்டிமாக்
ஜோதிடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் வீரர்கள் தேர்வு குறித்து பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளார். எனினும், கடைசியில் நட்சத்திரங்கள் சாதகமாக இல்லாத இரண்டு பிரபலமான வீரர்களை நீக்காமல் அணியிலேயே நீடிக்க வைத்துள்ளார். ஆனால், ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பும் இகோர் ஸ்டிமாக் மற்றும் ஷர்மா வீரர்கள் தேர்வு குறித்து விவாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணியின் திட்டமிடலை வெளியாட்களுடன் பகிர்ந்து கொள்வது, குறிப்பாக விளையாட்டு குறித்த அனுபவமே இல்லாதவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது இந்திய அணியின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்குவதாக விளையாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளவில் முதல் 100 இடங்களுக்குள் இந்திய அணி நுழையும் இந்த நேரத்தில் வெளியாகியுள்ள இந்த உரையாடல் அணியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.