யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
செய்தி முன்னோட்டம்
தற்போது நடந்து வரும் ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேற்று (ஜனவரி 22) இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
மிடில் ஆர்டர் பேட்டர் சௌமியா திவாரி 15 பந்தில் 28 ரன்கள் எடுத்து 60 ரன்கள் இலக்கை 7.2 ஓவர்களில் எட்ட இந்திய அணிக்கு உதவினார்.
முன்னதாக, இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கி, 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பார்ஷவி சோப்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய மகளிர் அணி
தோல்வியுடன் தொடங்கி வெற்றிப்பாதையில் முன்னேறும் இந்திய மகளிர் அணி
இந்திய அணி முதல் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், சூப்பர் சிக்ஸ் கட்டத்தின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையடுத்து தற்போது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஆறு புள்ளிகளுடன் இந்திய அணி தற்போது குரூப் 1 இல் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சூப்பர் சிக்ஸ் பிரிவுகளில் இருந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஜனவரி 27ஆம் தேதி தொடங்கும் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.