ஐசிசி தண்டனையை எதிர்கொள்ளும் ஹர்மன்ப்ரீத்; ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தடையா?
கடந்த வாரம் வங்கதேசத்தின் மிர்பூரில் நடந்த கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரிடம் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெரும் சிக்கலில் சிக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. டிராவில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆட்டமிழந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது பேட்டால் ஸ்டம்பை உடைத்தார். மேலும், போட்டியின் கள நடுவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், மேடையில் கோப்பையுடன் போட்டோ ஷூட்டின் போது, வங்கதேசத்திற்காக விளையாடிய நடுவர்களையும் வருமாறு கூறி கேலி செய்ததாக கூறப்பட்டது.
ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பு
ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்தில் போட்டி உபகரணங்களை தவறாக பயன்படுத்தியது மற்றும் போட்டி அதிகாரிகளிடம் மோசமாக நடந்து கொண்டது என இரண்டு வித குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஐசிசி இன்னும் முடிவெடுக்காத நிலையில், அவருக்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. மூன்று டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டால் அபராதம் மட்டுமே விதிக்கப்படும். எனினும், நான்கு டிமெரிட் புள்ளிகள் இருந்தால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு வொயிட் பால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். இதன்படி, நான்கு புள்ளிகளை பெற்றால், சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் இரண்டு ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாது.