உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த ஐசிசி தயக்கம்: 2031 வரை 9 அணிகள் மட்டுமே பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் எதிர்காலம் குறித்து இந்தோனேசியாவின் பாலி நகரில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற தலைமை நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், 2027-29 மற்றும் 2029-31 ஆகிய அடுத்த இரண்டு சுழற்சிகளுக்கும் தற்போதைய ஒன்பது அணிகள் கொண்ட வடிவத்தையே தக்கவைக்க ஐசிசி நிர்வாகம் விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
12 நாடுகள்
12 முழு நேர உறுப்பு நாடுகளையும் இணைக்க வேண்டும் என்ற 3 நாடுகளின் கோரிக்கை
நியூசிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் ரோஜர் ட்வோஸ் தலைமையிலான ஐசிசி பணிக்குழு, அனைத்து 12 முழு நேர உறுப்பு நாடுகளையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இணைக்கும் விரிவாக்கத் திட்டத்தை உருவாக்கியிருந்தது.
தற்போதைய பட்டியலில் இடம்பெறாத ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் உயர்மட்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடத் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தின.
மேலும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் இந்த விரிவாக்கத் திட்டத்திற்குத் தனது வலுவான ஆதரவைப் பதிவு செய்திருந்தது.
வணிக வருவாய்
வணிக வருவாய் சந்தேகமும் பிசிசிஐ, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிலைப்பாடுகளும்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை மட்டுமே ஐசிசி நேரடியாக நடத்தும் நிலையில், மற்ற லீக் தொடர்கள் அனைத்தும் உறுப்பு நாடுகளின் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமே நடத்தப்படுகின்றன.
இதனால் கூடுதல் அணிகளை சேர்ப்பது போதிய வணிக வருவாயை ஈட்டித் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், கூடுதல் பயண சுமை மற்றும் நிதி செலவுகள் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கு தயக்கம் காட்டி வருகிறது.
மாற்றுத் திட்டம்
10 அணிகள் கொண்ட மாற்றுத் திட்டமும் மெக்கின்ஸி மூலோபாய ஆய்வு அறிக்கையும்
அனைத்து 12 அணிகளையும் சேர்க்காவிட்டாலும், குறைந்தபட்சம் ஜிம்பாப்வே அணியை மட்டும் இணைத்து 10 அணிகள் கொண்ட தொடராக மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட போதிலும், அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் கட்டமைப்பு மற்றும் வருவாய் மாதிரி குறித்து உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி நடத்திய மூலோபாய மதிப்பீட்டு அறிக்கையும் ஐசிசி வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.