LOADING...
இந்தியாவுக்கு எதிராக விளையாட 3 கண்டிஷன்; ஐசிசி உடனான லாகூர் மீட்டிங்கில் பாகிஸ்தான் போட்ட பிளான்
INDvsPAK டி20 உலகக்கோப்பை மோதல் திட்டமிட்டபடி நடக்க 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான்

இந்தியாவுக்கு எதிராக விளையாட 3 கண்டிஷன்; ஐசிசி உடனான லாகூர் மீட்டிங்கில் பாகிஸ்தான் போட்ட பிளான்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 09, 2026
01:37 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதைச் சரிசெய்ய லாகூரில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெற்றது. இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தலைமையிலான குழு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வியுடன் சுமார் நான்கு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தியது.

கோரிக்கைகள்

பாகிஸ்தானின் 3 முக்கிய கோரிக்கைகள்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டுமானால், சில நிபந்தனைகளை ஐசிசி நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பின்வரும் கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்: உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஐசிசி வழங்க வேண்டும். போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், வங்கதேச கிரிக்கெட் அணிக்கு உரிய பங்கேற்பு கட்டணத்தை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தில் ஒரு முக்கிய ஐசிசி தொடரை நடத்தும் உரிமையை இப்போதே உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக, ஆசிய கோப்பையில் நடந்த கை குலுக்கல் தவிர்ப்பு போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை ஐசிசி உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

ஐசிசியின் பதில் மற்றும் எச்சரிக்கை

ஐசிசி பிரதிநிதிகள் இந்தப் பிரச்சினையைத் சுமூகமாக முடிக்க முயன்றாலும், சில கடுமையான எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர்: வங்கதேசத்திற்குத் தனிப்பட்ட இழப்பீடு எதுவும் வழங்க முடியாது என்றும், ஆனால் ஐசிசி வருவாயில் அவர்களுக்குரிய முழுப் பங்கும் கிடைக்கும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. போட்டியைப் புறக்கணிப்பது 'Force Majeure' (தவிர்க்க முடியாத சூழல்) என்பதன் கீழ் வராது என்றும், இதனால் பாகிஸ்தான் மீது கடும் அபராதம் அல்லது தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை ஐசிசி நடுவர் குழுவிடம் கொண்டு செல்லுமாறு பிசிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இறுதி முடிவு

அடுத்த 24 மணிநேரத்தில் இறுதி முடிவு

லாகூர் சந்திப்பில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை நேர்மறையாக முடிந்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இறுதி முடிவை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் எடுக்க உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி இன்று பிரதமரை சந்தித்து ஐசிசி உடனான பேச்சுவார்த்தை குறித்து விளக்க உள்ளார். அடுத்த 24 முதல் 48 மணிநேரத்திற்குள் பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement