ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் போட்டி அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. போட்டி தொடங்க சரியாக 100 நாட்கள் உள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, அகமதாபாத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி நடக்க உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாபர் அசாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது.
அகமதாபாத்தில் இறுதிப்போட்டி
இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட உள்ளனர். ஒவ்வொரு அணியும் மற்ற ஒன்பது அணிகளுடன் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் நிலை மற்றும் அரையிறுதிக்கு தகுதி பெறும். இரண்டு அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இருக்கும். நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ள நிலையில், இரண்டு அரையிறுதிகள் முறையே மும்பையின் வான்கடே ஸ்டேடியத்திலும், கொல்கத்தாவின் ஈடன் கார்டனிலும் முறையே நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும்.