போட்டியில் இதை செய்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் இலவசம்; விதிகளை கடுமையாக்கிய ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பந்துவீசும்போது தாமதப்படுத்தினால் அபராதம் விதிக்கும் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஆடவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசும் அணிக்கு ஓவர்களுக்கு இடையில் 60 வினாடிகள் வழங்கப்படும் மற்றும் ஒரு குறிப்பிட்ட இன்னிங்ஸில் மூன்று முறை தாமதம் ஏற்பட்டால் அபராதமாக, பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் இலவசமாக வழங்கப்படும். புதிய அபராத முறை வரும் டிசம்பர் முதல் 2024 ஏப்ரல் வரை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு அதன் பின்னர் முழுமையாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அகமதாபாத்தில் நடந்த ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிட்ச் மற்றும் அவுட்டிங் கண்காணிப்பு ஒழுங்குமுறை மாற்றங்கள்
பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் கண்காணிப்பு ஒழுங்குமுறையில் மாற்றங்களுக்கும் ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆடுகளத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை எளிமையாக்குதல் மற்றும் ஒரு மைதானத்தின் ஐந்தாண்டு கால சர்வதேச அந்தஸ்தின்போது ஐந்து குறைபாடு புள்ளிகளை பெற்றால் தரமிறக்கப்படுவதற்கு பதிலா, அதை ஆறு புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. இவை தவிர பெண் நடுவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐசிசி ஒரு முற்போக்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் உள்ள அனைத்து ஐசிசி நடுவர்களுக்கும் இனி போட்டி நாள் ஊதியம் சமமான அளவில் இருக்கும். இது ஜனவரி 2024 முதல் அமலுக்கு வர உள்ளது.