வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து?
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஒருநாள் தொடரை மார்ச் மாதம் விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் செவ்வாய் (மே 9) முதல் விளையாட உள்ளன. செம்ஸ்ஃபோர்டில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர், 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்யும் போட்டி என்பதால் மிகவும் முக்கித்துவம் பெற்றுள்ளது. இந்தத் தொடரின் முடிவு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும்.
அயர்லாந்து ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு அயர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற இந்த ஒருநாள் தொடரின் போது வங்கதேச கிரிக்கெட் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும். மேலும் அதில் ஒரு வெற்றி மிகப்பெரிய வித்தியாசத்தில் இருக்க வேண்டும். அயர்லாந்து 30 புள்ளிகள் மற்றும் நிகர ரன் விகிதத்தில் 0.305 எடுத்து புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவை விட பின்தங்கி உள்ளது. கடந்த மார்ச்சில் வங்கதேசத்திடம் 0-2 என படுதோல்வி அடைந்தாலும், அயர்லாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நல்ல கம்பேக் கொடுத்து தற்போது வலுவாக உள்ளது. மேலும் ஐபிஎல்லுக்காக இந்தியா வந்திருந்த ஜோஷுவா லிட்டிலும் நாடு திரும்பியுள்ளதால், மிப்பெரிய நம்பிக்கையுடன் வங்கதேசத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.