ஒருநாள் உலகக்கோப்பை பிட்ச் இப்படித்தான் இருக்கணும்; கண்டிஷன் போட்ட ஐசிசி
ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ரன் குவிப்பதை ஊக்குவிப்பதற்காக பேட்டிங்கிற்கு ஏற்ற டிராக்குகளை உருவாக்க பிசிசிஐயிடம் ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மோதலுடன் தொடங்குகிறது. 44 நாட்களில் 10 மைதானங்களில் 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. நவம்பர் 19-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கோப்பைக்காக மோதும். இந்நிலையில், ஐசிசி பிட்ச் க்யூரேஷனுக்கான தெளிவான வழிமுறைகளை போட்டியை நடத்தும் மாநில சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் 60-40 என பிட்ச்சை வழங்குமாறு கோரியுள்ளது.
ஐசிசி பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் ஆலோசனை
ஐசிசி பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 23) போட்டியை நடத்தும் அனைத்து மாநில சங்கங்களின் கியூரேட்டர்களின் கூட்டத்தில் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது கடந்த மூன்று 50 ஓவர் உலகக் கோப்பைகளின் ரன்-ஸ்கோர் தரவுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் 2015இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த போட்டியில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 275 மற்றும், 2019இல் இங்கிலாந்தில் நடந்த போட்டியில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 276 ஆகவும் இருந்துள்ளது. ஆனால், 2011இல் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் நடத்திய போட்டியில் 249 ரன்கள் மட்டுமே சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோராக இருந்ததால், தற்போது அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஐசிசி இறுதியாக உள்ளது.
இந்த காலவரிசையைப் பகிரவும்