'தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் ஆச்சரியப்படுவேன்' : கெவின் பீட்டர்சன்
ஐபிஎல் 2023 சீசனுக்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்எஸ் தோனி அறிவித்தால் தான் ஆச்சரியப்படுவேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். கெவின் பீட்டர்சன் மேலும் கூறுகையில், இம்பாக்ட் பிளேயர் விதி தோனியின் ஐபிஎல் வாழ்க்கையை நீடிக்க உதவும் என்று கூறினார். 2023 சீசனுடன் தோனி ஐபிஎல்லில் விடைபெறலாம் என்று ரசிகர்கள் கருதுவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுக்கு இந்த சீசனில் சேப்பாக்கம் மட்டுமல்லாது வெளியூர் மைதானங்களில் நடக்கும் போட்டிகளிலும் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவைப் பெற்று வருகிறார்.
காயத்தால் அவதிப்படும் எம்எஸ் தோனி
நடப்பு சீசனில் எம்எஸ் தோனி பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங் செய்யும்போது பலமுறை நொண்டியடித்தபடி இருந்தார். தோனி பலமுறை போட்டிகளுக்குப் பிறகு முழங்காலில் ஐஸ் கட்டியுடன் காணப்பட்டார். கடந்த மாதம், சிஎஸ்கே பயிற்சியாளர் ஃப்ளெமிங், தோனி முழங்கால் காயத்தால் அவதிப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், இந்த சீசனுக்குப் பிறகு தோனி தனது முழங்கால் காயத்தை சரி செய்து, ஐபிஎல் 2024க்கு மீண்டும் வருவதற்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். 'தோனிக்கு இது கடைசி சீசனல்ல. அவர் மற்றொரு சீசனில் விளையாட வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைவரும் விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும்.' என்று பீட்டர்சன் மேலும் கூறினார்.