நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா!
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நேற்று தோல்வியடைந்து இந்திய அணி, உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.
ஒடிஷாவின் புவனேஷ்வரில் நடந்து வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில், முதல் சுற்றில் இந்தியா டி பிரிவில் இடம் பெற்றிருந்தது. இதில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்தது.
இதையடுத்து காலிறுதிக்கு தகுதி பெற கிராஸ்ஓவர் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் நேற்று மோதியது.
இதில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடிய நிலையில், போட்டியின் முடிவில் 3-3 என டிரா ஆகியது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 4-5 என்ற கோல் கணக்கில் வெற்றியை இழந்து வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பை
ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறன்
இந்தியா 1975 இல் ஒரே ஒருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 1973 மற்றும் 1971 இல் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
2018 சீசனில் இந்திய அணி கால் இறுதிப் போட்டியில் வெளியேறியது. மேலும் 1982 க்குப் பிறகு, கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியா ஹாக்கி உலகக்கோப்பையில் விளையாடுவது இதுவே முதல் நிகழ்வு.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று 41 ஆண்டுகால காத்திருப்புக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
1982, 2010, 2018 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நான்காவது முறையாக உலகக்கோப்பையை நடத்துகிறது. ஒரு நாடு போட்டியை நடத்தும் அதிக முறை இதுவாகும். தொடர்ச்சியாக இரண்டு முறை போட்டியை நடத்தும் முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.