இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியரின் 100வது பிறந்த தினம் இன்று
செய்தி முன்னோட்டம்
இந்திய ஹாக்கி அணியின் பொற்காலம் என 1928 முதல் 1956 வரையிலான காலகட்டம் கருதப்படுகிறது.
இதற்கு காரணம், இந்த சமயத்தில் இந்திய ஆடவர் அணி ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக ஆறு தங்கப் பதக்கங்களை வென்றது.
இந்த கால கட்டத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல், த்யான் சந்த் மற்றும் பல்பீர் சிங் சீனியர் இருவரும் மிகவும் பேசப்பட்ட இரண்டு ஜாம்பவான்கள் ஆவார்.
த்யான் சந்த் தொடக்க கால இந்திய ஹாக்கி அணியில் கொடிகட்டி பறந்த நிலையில், பல்பீர் சிங் 1948 லண்டன் ஒலிம்பிக்கில் சுதந்திர இந்தியாவின் முதல் தங்கத்தை வென்ற அணியின் ஒரு பகுதியாக இடம் பெற்று தனி முத்திரை பதித்தார்.
அவரது 100வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Balbir Singh Sr 100th birth anniversary
பல்பீர் சிங் 'சீனியர்' என்ற பெயருக்குப் பின்னால் உள்ள வேடிக்கையான கதை
1950 மற்றும் 60 களில், இந்திய ஹாக்கி வீரர்களின் பெரும் பகுதியினர் பஞ்சாபில் இருந்து வந்தவர்களாக இருந்ததோடு, அவர்களில் பலர் பல்பீர் சிங் என்ற பெயரைக் கொண்டிருந்தனர்.
ஆச்சரியம் என்னவென்றால், 1968 ஒலிம்பிக்கில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றபோது, நம் வீரர்கள் மூன்று பேர் இந்த பெயரை கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அவரது பெயருடன் 'சீனியர்' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.
பல்பீர் சிங் இந்திய அணிக்காக 1948, 1952 மற்றும் 1956 என ஹாட்ரிக் ஒலிம்பிக் தங்கத்தை பெற்றதோடு, 1958 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
மேலும், பயிற்சியாளராக 1971 உலகக்கோப்பையில் வெண்கலம் மற்றும் 1975 உலகக்கோப்பையில் தங்கம் வென்ற இந்திய அணியை வழிநடத்தினார்.