
வரலாற்றில் முதல்முறை: இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சாமரி அட்டப்பட்டு ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம்
செய்தி முன்னோட்டம்
ஐசிசி மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதில் முக்கிய பங்கு வகித்த இலங்கை கேப்டன் சாமரி அட்டப்பட்டு, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கையின் முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும், செப்டம்பர் 2002 முதல் மே 2003 வரை, 181 நாட்களுக்கு ஆடவர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஒரே இலங்கை வீரரான சனத் ஜெயசூர்யாவுக்கு பிறகு, பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இலங்கை கிரிக்கெட்டர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
chamari athapaththu performance in nz series
நியூசிலாந்துக்கு எதிராக அபாரமான ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் சாமரி அட்டப்பட்டு, இரண்டு சதங்களை விளாசியதன் மூலம் ஏழாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறினார்.
அந்த தொடரில் முதல் போட்டியில் 83 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 108 ரன்களும், இறுதிப் போட்டியில் 80 பந்தில் ஆட்டமிழக்காமல் 140 ரன்களும் எடுத்தார். இதற்காக சாமரி அட்டப்பட்டு, ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதுகளையும் வென்றுள்ளார்.
முன்னதாக, 2014 ஆம் ஆண்டில் மகளிர் தரவரிசையில் மற்ற இரண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மட்டுமே முதலிடத்தை எட்டியுள்ளனர்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் உதேஷிகா பிரபோதனி டி20 பந்துவீச்சு தரவரிசையிலும், ஷஷிகலா சிறிவர்தன டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்திருந்தனர்.