காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸூக்கு தங்கம்
காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸ் தங்கம் வென்றார். காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 6 வரை நடந்தது. இதில் 10 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 235 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டுக்கு பிறகு போர்ட் எலிசபெத்தில் இரண்டாவது முறையாக ஜூடோ சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா நடத்தியது. இதில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஹிமான்ஸி டோகாஸ் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) 63 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்றார். ஹிமான்ஸி டோகாஸ் போபாலில் உள்ள ரவீந்திரநாத் பல்கலைக் கழக மாணவி மற்றும் மத்திய அரசின் டாப்ஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.