வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக சண்டிக ஹத்துருசிங்க நியமனம்!
இரண்டு வருட காலத்திற்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக சண்டிக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் செவ்வாய்கிழமை (ஜனவரி 31) தெரிவித்துள்ளது. முன்னதாக 2014 முதல் 2017 வரை வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனுபவத்தைக் கொண்டுள்ள ஹத்துருசிங்க, பிப்ரவரியில் பயிற்சியாளராக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீராம் வங்கதேச டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நிலையில், ஹத்துருசிங்க எந்த கிரிக்கெட் வடிவங்களுக்குப் பொறுப்பேற்பார் என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளதால், அதற்கு பயிற்சி அளிக்கும் வகையில், ஒருநாள் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சண்டிக ஹத்துருசிங்கவின் கீழ் வங்கதேசத்தின் செயல்திறன்
வங்கதேசத்தின் பயிற்சியாளராக இருந்த அவரது முந்தைய பயிற்சி காலத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேச அணி வென்றது. மேலும் இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் வெற்றிகளையும் வங்கதேச கிரிக்கெட் அணி பெற்றது. 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசமும் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ஹத்துருசிங்க, "வங்கதேச தேசிய அணிக்கு மீண்டும் ஒருமுறை பயிற்சியாளராக இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு கிடைத்த மரியாதை. நான் அங்கு சென்ற போதெல்லாம் மக்களின் அரவணைப்பு மற்றும் கலாச்சாரத்தை நான் மிகவும் விரும்பினேன். மீண்டும் ஒருமுறை வீரர்களுடன் பணியாற்றவும், அவர்களின் வெற்றிகளை அனுபவிக்கவும் ஆவலுடன் உள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.