சிஎஸ்கே அணிக்கு மாறுகிறாரா ஹர்திக் பாண்டியா? தோனி குறித்த வதந்திக்கு அஸ்வின் பதில்
செய்தி முன்னோட்டம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, வரவிருக்கும் ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாறக்கூடும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் யூகங்கள் குறித்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். எம்.எஸ். தோனி நேரடியாகப் பேசி ஹர்திக்கை சிஎஸ்கேவுக்கு அழைத்து வருவார் எனப் பேசப்பட்டு வரும் நிலையில், அந்த ஒப்பந்தம் சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே அஸ்வின் தெரிவித்துள்ளார்.
திருப்பம்
சிஎஸ்கேவுக்கு வருவாரா ஹர்திக் பாண்டியா?
தனது யூடியூப் தளத்தில் இது தொடர்பாகப் பேசிய அஸ்வின், "எம்.எஸ். தோனியே நேரடியாகப் பேசி ஹர்திக் பாண்டியாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கொண்டு வர முயற்சிப்பதாகப் பல்வேறு பேச்சுகள் அடிபடுகின்றன.
ஹர்திக் பாண்டியா சென்னை அணிக்குள் வந்தால் அது நிச்சயம் அணிக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் எனது தனிப்பட்ட பார்வையில், இந்த ஒப்பந்தம் நடைபெறுவது மிக மிகக் கடினமான, எட்டாத ஒரு விஷயம் (Far-shot). அதேசமயம், ஹர்திக் பாண்டியாவை வீரர்கள் பரிமாற்றம் (Trade) முறையில் வாங்க முயற்சிக்கும் அணிகளின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிதான் முதலிடத்தில் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்" என்று ஒரு புதிய திருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாற்றங்கள்
மும்பை அணயில் அதிரடி மாற்றங்கள்
ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களைத் தக்கவைப்பதற்கான (Retention) கடைசி தேதி நவம்பர் 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த இலங்கை ஜாம்பவான் மகேலா ஜெயவர்த்தனே தனது பொறுப்பிலிருந்து அண்மையில் விலகியுள்ளார்.
அவரது இரண்டாவது கட்டப் பயிற்சியில் மும்பை அணி 2026 சீசனில் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு பெரும் ஏமாற்றமளித்தது.
தற்போது புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணிகளில் மும்பை நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் வேளையில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்த யூகங்களும் விவாதங்களும் ஐபிஎல் அரங்கில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன.