குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
ஐபிஎல் 2023 தொடரில் 44வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 2) குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் 2022 தொடரில் தான் ஐபிஎல்லில் அறிமுகமாகியுள்ளது என்பதால் இரு அணிகளும் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே மோதியுள்ள நிலையில், இரண்டிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 8போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியும், கடைசி இடத்தில் உள்ள அணியும் மோதுவது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரோவ்மேன் பவல் இன்னும் 54 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டுவார். ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு இன்னும் 3 விக்கெட்டுகளும், அன்ரிச் நார்ட்ஜேவுக்கு இன்னும் 1 விக்கெட்டும் தேவையாக உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் ஷர்மா ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் 3 விக்கெட்டுகளும் தேவை. இதே போல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் விஜய் சங்கர் ஐபிஎல்லில் 1,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்ட இன்னும் 70 ரன்கள் தேவை.