Page Loader
ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு; காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விலகல்
காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தென்னாப்பிரிக்க டி20 தொடரிலிருந்து விலகல்

ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு; காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2023
12:27 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், இடது கணுக்கால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேக்ஸ்வெல்லுக்கு கடந்த ஆண்டு ஒரு விபத்து ஒன்றில் சிக்கி கால் முறிந்தது. இதனால் பல மாதங்கள் ஓய்வில் இருந்த அவர் இந்த அணிக்குத் திரும்பினார். இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக அங்கு முகாமிட்டுள்ள நிலையில், காயம் ஏற்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு, ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் தனது முதல் குழந்தை பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க முன்கூட்டியே நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது காயம் காரணமாக அதற்கும் முன்னதாகவே நாடு திரும்புகிறார்.

mathew wade repalces glenn maxwell

கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மாற்று வீரராக மேத்யூ வேட் சேர்ப்பு

கிளென் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளதால், விக்கெட் கீப்பர்-பேட்டர் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மேத்யூ வேட் கடைசியாக 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பிறகு, ஆஸ்திரேலிய அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கிளென் மேக்ஸ்வெல் தவிர மேலும் பல சீனியர் வீரர்களும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டி20 அணியில் இடம்பெறவில்லை. இதில் பாட் கம்மின்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், கேமரூன் கிரீன் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகி வருவதால் அணியில் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.