தொடரை இழந்தாலும், இரண்டாவது போட்டியில் வலுவான ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி
ஆடவர் இந்திய ஹாக்கி அணி ஜெர்மனிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் வலுவான மறுபிரவேசம் செய்த போதிலும் பெனால்டி ஷூட்அவுட்டில் தோற்று தொடரை இழந்தது. முன்னதாக, முதல் போட்டியை ஜெர்மனி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. இந்நிலையில், ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, முதல் பாதி முடிவில் ஜெர்மனியிடம் 0-1 என பின்தங்கி இருந்தது. எனினும், இரண்டாவது பாதி தொடங்கி 11 நிமிடங்களுக்குள் 4 கோல்களை அடித்த இந்தியா இறுதியில், ஜெர்மனியை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியது.
பெனால்டி ஷூட்அவுட்டில் தோற்றது இந்தியா
இதனால் தொடர் 1-1 என சமன் ஆன நிலையில், தொடரை வெல்லும் அணியை முடிவு செய்ய பெனால்டி ஷூட்அவுட் நடத்தப்பட்டது. பெனால்டி ஷூட்அவுட்டில் இந்தியா ஒரு கோல் மட்டுமே அடித்த நிலையில், ஜெர்மனி அணி 3 கோல்களை அடித்ததால், அந்த அணி தொடரை வென்றது. உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெர்மனி அணி, மிகவும் வலுவாக இருந்ததால், அந்த அணியே தொடரை வெல்லும் என கணிக்கப்பட்டு இருந்தது. எனினும், இரண்டாவது போட்டியில் இந்தியாவின் உற்சாகமான ஆட்டம் அவர்களின் சிறப்பான ஆட்டத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியது. தொடரை இழந்தபோதும், இந்திய அணியின் செயல்திறன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், எதிர்கால சர்வதேச போட்டிகளுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.