
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பயங்கரவாதக் குழுவிலிருந்து மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.
"நான் உன்னைக் கொள்வேன்" என்று வாசகங்கள் கொண்ட அந்த மின்னஞ்சலை அடுத்து, தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லி காவல்துறையிடம் காம்பிர் முறையான புகார் அளித்துள்ளார்.
இரண்டு மின்னஞ்சல்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) வந்ததைத் தொடர்ந்து உடனடியாக காவல்துறையை அணுகியதாக அவரது அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை காம்பிர் பகிரங்கமாகக் கண்டித்து, சமூக ஊடகங்களில் "இந்தியா தாக்கும்" என்று கூறி பதிவிட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமை பயிற்சியாளர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்
ஜூலை 2024 இல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற காம்பிர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகள் உட்பட தொடர்ச்சியான மோசமான ஆட்டங்களுக்குப் பிறகு ஆரம்பத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
உள் முரண்பாடுகள் மற்றும் கசிந்த டிரஸ்ஸிங் ரூம் உரையாடல்கள் பற்றிய செய்திகளால் பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.
இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவை சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு வழிநடத்திய பிறகு அவர் ஆதரவை மீண்டும் பெற்றார்.
ஐபிஎல் 2025 தற்போது நடந்து வருகிறது. இந்த சமயத்தில் தேசிய பயிற்சியாளர்கள் பொதுவாக பணியில் இருந்து விலகி இருப்பார்கள்.
அந்த வகையில் குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றிருந்த காம்பிர், இந்த சம்பவத்திற்கு சற்று முன்தான் திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.