இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிறந்த தினம் இன்று
பயங்கரமான சிக்ஸர்களை அடிப்பது முதல் நெருக்கடியான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை எடுப்பது வரை, ஹர்திக் பாண்டியா மிக குறுகிய காலத்தில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார். இடையில் காயத்தால் பாதிக்கப்பட்டு, சில காலம் ஓய்வில் இருந்தாலும் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக 18 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார். அவர் இன்று (அக்டோபர் 11) தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவரது வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பயணம் குறித்து இதில் பார்க்கலாம். ஹர்திக் பாண்டியா, அக்டோபர் 11, 1993 அன்று குஜராத்தின் சூரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். ஹர்திக், மாடல் நடாசா ஸ்டான்கோவிச்சை மணந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கை
உள்நாட்டு கிரிக்கெட்டில், ஹர்திக் பாண்டியா பரோடா கிரிக்கெட் அணியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஜனவரி 2016இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெடில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது 22 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அப்போதிருந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு வந்த ஹர்திக், தற்போது ரோஹித் ஷர்மா இல்லாதபோது, இந்திய அணியின் ஒயிட் பால் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் ஷர்மா ஓய்வுக்கு பிறகு, எதிர்கால இந்திய அணியின் நிரந்தர கேப்டன் பொறுப்பையும் ஹர்திக் பாண்டியா ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2022 ஐபிஎல்லில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று, அந்த சீசனில் அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.