இந்தியாவில் மீண்டும் சீறப்போகும் F1 கார்கள்! மத்திய அரசு போட்ட மெகா பிளான்! எப்போது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஃபார்முலா 1 கார் பந்தயங்களை மீண்டும் நடத்துவதற்கான வாய்ப்புகள் தற்போது பிரகாசமாகியுள்ளன. நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை மேம்படுத்தவும், சர்வதேச பந்தயங்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரவும் ஒரு பிரத்யேக பணிக்குழு அமைக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை இந்தியாவில் வெற்றிகரமாக நடத்துவதை மத்திய அரசு ஒரு முக்கிய இலக்காக நிர்ணயித்துள்ளது.
பிரத்யேக பணிக்குழு
விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைக்கும் பிரத்யேக பணிக்குழு
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் நான்கு முதல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தகுதிவாய்ந்த குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழு இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளின் தற்போதைய கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சவால்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தும். மேலும், ஃபார்முலா 1 போன்ற உலகளாவிய மெகா விளையாட்டு நிகழ்வுகளை இந்தியாவில் நடத்துவதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் சர்வதேச அங்கீகாரம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு மற்றும் புதிய முதலீடுகள் குறித்தும் இந்த குழு விரிவாக ஆராயும்.
இறுதி அறிக்கை
மூன்று மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
இந்த உயர்மட்ட பணிக்குழுவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு அதிகாரிகள், உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகள் மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புகழ்பெற்ற புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டின் உரிமையாளர்கள் ஆகியோர் இடம்பெறவுள்ளனர். இந்தப் பணிக்குழு தனது விரிவான கள ஆய்வுகளை முடித்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் தங்களின் இறுதிப் பரிந்துரைகளை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்படும்.
இலக்கு
2028 ஆம் ஆண்டிற்குள் பந்தயத்தை நடத்த இலக்கு
முன்னதாக இந்த பந்தயத்தை 2027 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது போதிய கால அவகாசம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 2028 ஆம் ஆண்டு இறுதி இலக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான கொள்கை வரைவு அடுத்த ஆண்டிற்குள் (2027) முழுமையாகத் தயார் செய்யப்பட்டுவிடும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச போட்டிகளை நடத்துவதுடன் மட்டுமின்றி, நாட்டின் கிராமப்புற மற்றும் பிராந்திய அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த புதிய திட்டத்தில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
ரசிகர்கள் ஆதரவு
இந்தியாவில் வேகமாக உயரும் ஃபார்முலா 1 ரசிகர் பட்டாளம்
கடந்த 2011 முதல் 2013 வரை புத்தர சர்வதேச சுற்றுகளத்தில் ஃபார்முலா 1 பந்தயங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. ஆனால், அதன் பின்னர் ஏற்பட்ட வரி விதிப்பு சர்ச்சைகள் மற்றும் சில நிதி நெருக்கடிகள் காரணமாக இந்த பந்தயம் இந்தியாவில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த விளையாட்டிற்கான ரசிகர்களின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாத கணக்கெடுப்பின்படி 79 மில்லியனாக இருந்த ரசிகர்களின் எண்ணிக்கை, தற்போது 98 மில்லியனாக உயர்ந்துள்ளது இந்த பந்தயத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான தேவையை வலுப்படுத்தியுள்ளது.