ஐபிஎல் 2024 ஏலம் : அதிக தொகைக்கு அணிகள் கைப்பற்ற வாய்ப்புள்ள டாப் 5 வீரர்கள்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடத்தப்படுவது இதுதான் முதல் முறையாகும், மேலும் இந்த ஏலத்தில் அனைத்து அணிகளிலும் சேர்த்து 77 காலி இடங்கள் உள்ளன. இதற்கான ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்கும் நிலையில், வீரர்களை கைப்பற்ற அனைத்து அணிகளிடமும் சேர்த்து மொத்தமாக ₹250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் உள்ளது. இந்த ஏலத்தில் சில திறமையான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எதிர்பார்க்கப்படும் ஐந்து வீரர்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.
ஷாருக் கான் (அடிப்படை விலை: ₹40 லட்சம்)
ஐபிஎல் 2023 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஷாருக் கானை அந்த அணி 2024 ஐபிஎல்லுக்கான ஏலத்திற்கு முன்பாக அணியிலிருந்து விடுவித்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம், சமீபத்தில் நடந்த உள்நாட்டு ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை என்பதுதான். ஆனால், ஒரு உள்நாட்டு வீரரான ஷாருக் கான் மிகச் சிறந்த பினிஷிங் திறனைக் கொண்டுள்ளார். மேலும் தனது ஆஃப் ஸ்பின்னிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவராகவும் அவர் இருப்பதால், அவரது இருப்பு எந்தவொரு அணிக்கும் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்பதால், அவரை வாங்க அணிகள் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்செல் ஸ்டார்க் (அடிப்படை விலை ₹2 கோடி)
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை பொறுத்தவரை அவர் ஐபிஎல்லில் விளையாட விரும்புவாரா இல்லையா என்பது எப்போதுமே ஒரு விவாதமாக இருந்து வந்துள்ளது. இரண்டு முறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாடி உலகக்கோப்பை பட்டத்தை வென்ற மிட்செல் ஸ்டார்க், 2015 முதல் ஐபிஎல்லில் விளையாடவில்லை. எனினும், அவர் எப்போது ஐபிஎல்லுக்கு வந்தாலும், அவரை எந்தவிலை கொடுத்தாவது வாங்கி விட வேண்டும் என்பதில் பல அணிகள் உறுதியாக உள்ளன. இந்நிலையில், தற்போது 34 வயதாகும் அவர், தனது கேரியரின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் கூட, அணிகளால் அதிகம் விரும்பக் கூடிய வீரராக இருப்பதால், அதிக தொகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராச்சின் ரவீந்திரா (அடிப்படை விலை ₹50 லட்சம்)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் காயமடையாமல் இருந்திருந்தால் ராச்சின் ரவீந்திரா என்ற ஒரு திறமையாளர் இருப்பதே பலருக்கும் தற்போது தெரிந்திருக்காது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மைக்கேல் பிரேஸ்வெல் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்பட்ட ராச்சின், கேப்டன் கேன் வில்லியம்சன் உடல்தகுதியுடன் இல்லாததால் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டார். அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு. ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய மைதானங்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராச்சின், ஸ்பின்னராகவும் சிறப்பாகவே செயல்பட்டார். இதனால் ஐபிஎல் 2024 சீசனுக்கு அவரை கைப்பற்ற பல அணிகள் முனைப்பு காட்டி வருவதால் அதிக தொகைக்கு வாங்கப்பட வாய்ப்புண்டு.
ஹர்ஷல் படேல் (அடிப்படை விலை ₹2 கோடி)
பஞ்சாப் கிங்ஸ் ஷாருக் கானை வெளியேற்றியது போலவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஹர்ஷல் படேலை வெளியேற்றியது பார்க்கப்பட்டது. பவர்பிளே மற்றும் குறிப்பாக, டெத்ஓவர் போன்ற உயர் அழுத்த சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படும் வீரர் என்ற பெயரைக் கொண்ட ஹர்ஷல் படேலின் பந்துவீச்சை எதிர்கொள்ள எதிரணி பேட்டர்கள் தயங்குவார்கள். ஆனால், 2023இல் இது நேர்மாறாக மாறி, அவரது மிக மோசமான சீசனாக இருந்தது. இருந்தாலும் அனுபவம் வாய்ந்த உள்நாட்டு வீரர் என்பதால் அவரை வாங்கவும் பல அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
வனிந்து ஹசரங்கா (அடிப்படை விலை ₹1.5 கோடி)
ஏலத்தில் பல்வேறு அணிகளும் வாங்க விரும்பும் வீரர்களில் முக்கியமானவராக வனிந்து ஹசரங்கவும் உள்ளார். அவர் தனது தந்திரமான சுழற்பந்து வீச்சுக்கு பெயர் பெற்றதோடு, லோயர் மிடில் ஆர்டரில் குறிப்பிடத்தக்க அளவில் ரன் சேர்க்கும் திறனும் கொண்டவர் ஆவார் மற்றும் மிகவும் நம்பகமான பீல்டர் ஆவார். 2022 ஏலத்தில், அவரைக் கைப்பற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கடுமையாக மோதியது. ஆல்ரவுண்டர்களின் முதல் பட்டியலில் கிடைக்கும் முதல் ஸ்பின்னர் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அவர் இருப்பார். மேலும் ஆல்ரவுண்டர் குழுவிலும் அவரது தனித்துவமான மணிக்கட்டு ஸ்பின் திறமை கொண்ட வீரர்கள் வேறு யாரும் இல்லை என்பது அவருக்கு சாதகமாக உள்ளது.