INDvsNZ 3வது டெஸ்ட்: 24 ஆண்டுகளில் முதல்முறை; உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் தோற்று இந்தியா, 24 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியைப் பெற்றுள்ளது. முன்னதாக, முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்த இந்தியா, வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது மற்றும் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, முதல் நாளிலேயே 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் வில் யங் 71 ரன்களும், டேரில் மிட்செல் 82 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா முன்னிலை
இதையடுத்து ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்டின் அபார ஆட்டம் மூலம் 263 ரன்கள் சேர்த்து இரண்டாவது நாளில் ஆல் அவுட் ஆனது. ஷுப்மன் கில் 90 ரன்களும், ரிஷப் பண்ட் 60 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இந்தியாவை விட 28 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, போட்டியின் மூன்றாவது நாளான இன்று 174 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் வில் யங் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
147 ரன்கள் வெற்றி இலக்கு
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நீண்ட நேரம் போராடி 64 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. இதர வீரர்களில் ரோஹித் ஷர்மா (11) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (12) மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்த நிலையில், மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து வெளியேறினர். இதனால், 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தோல்வியின் மூலம், இந்தியா 0-3 என நியூசிலாந்து அணியில் ஒயிட்வாஷ் ஆனது.
24 ஆண்டுகளில் முதல்முறை ஒயிட்வாஷ்
24 ஆண்டுகளாக உள்நாட்டில் எந்தவொரு அணியாலும் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்யப்படாத அணி என்ற இந்தியாவின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டது. இந்திய அணி கடைசியாக 2000ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் 0-2 என ஒயிட்வாஷ் ஆனது. இதுவே மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என எடுத்துக் கொண்டால், இந்தியா கடைசியாக 1997இல் இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் ஆட்டத்தை முடிந்தது. எனினும், தென்னாப்பிரிக்கத் தொடரைப் போல் அல்லாமல், இந்த தொடர் 0-0 என முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் இதர மோசமான சாதனைகள்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே சில மோசமான சாதனைகளை படைத்துள்ளது. முன்னதாக, முதல் போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம், நியூசிலாந்து அணியிடம் உள்நாட்டில் 1988க்கு பிறகு முதல்முறையாக தோல்வியை பெற்றது. இரண்டாவது போட்டியில் பெற்ற தோல்வி மூலம், முதல் முறையாக நியூஸிலாந்திடம் உள்நாட்டில் தொடரை இழந்தது. மேலும், 2012 முதல் உள்நாட்டில் நடந்த 18 தொடர்களில் ஒன்றில் கூட தொடரை இழக்காமல் இருந்த நிலையில், அந்த சாதனைக்கு முடிவுரை எழுதப்பட்டது. இந்நிலையில், தற்போது உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல்முறையாக ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.